Sarada nambi arooran biography of mahatma

பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் கல்லூரி முதல்வராகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆன்மிகச் சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் எனப் பன்முகத்தன்மைகொண்டவர். மறைமலை அடிகளாரின் மகள் வயிற்றுப் பேரன், நம்பி ஆரூரனை மணந்தவர். இவர் தன் `வாழ்வை மாற்றிய வாக்கியம்' பற்றிக் கூறுகிறார்.

``அப்போது எங்களின் வீடு சென்னை, ராயப்பேட்டையில் இருந்தது.

ராணி மேரி கல்லூரியில் 1965-ம் ஆண்டு இளங்கலை தமிழ் இலக்கியம் படிச்சிக்கிட்டிருந்தேன். சுகிசிவம் அண்ணன் எம்.எஸ்.பெருமாள், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் எல்லாம் எனக்கு கிளாஸ்மேட்ஸ். ஸ்ரீதரின் மனைவி தேவசேனா எங்கக்கூடத்தான் படிச்சாங்க, அவங்க தெலுங்கு இலக்கியம். மொழிப்பாடமான ஆங்கில வகுப்பில் ஒன்றாக அமர்ந்திருப்போம்.

அப்போதெல்லாம் தமிழ்ப் படிக்கும் மாணவர்களுக்கு `இலக்கியத் திறனாய்வு' வகுப்பு நடக்கும்.

டாக்டர்.மு.வரதராசனார்தான் எங்களுக்கு வகுப்பெடுப்பார். இந்த வகுப்பில் கலந்துக்கிறதுக்காக பச்சையப்பன் கல்லூரி, ராணிமேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலிருந்து தமிழ் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவருமே ஒரே வகுப்பில் அமர்ந்து வகுப்பைக் கவனிப்போம்.

இவர்கள் அனைவருக்கும் சேர்த்துத்தான் அந்த இலக்கியத் திறனாய்வு வகுப்பு இரண்டு ஆண்டுகள் நடைபெறும்.

அப்போதுதான் இவர்களெல்லாம் எனக்கு அறிமுகமானார்கள்.

அப்போது மு.வரதராசனார், பெண் சுதந்திரம் பற்றியும் அது எந்த அளவு இருக்க வேண்டும் என்பது பற்றியும் மிகத் தெளிவாகவும் அருமையாகவும் சொல்வார்.

``பட்டம் எவ்வளவு உயரத்துல பறந்தாலும் அதனுடைய நூல் அறுந்து போகாமல் இருக்க வேண்டும். அந்த நூலின் மறுமுனை கீழே இருப்பவரின் கைகளில் இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கையும் அப்படித்தான்'' என்று கூறுவார்.

எனக்கு மிகவும் பிடித்த வாக்கியம் இது.

எங்கள் கல்லூரியின் பிரிவு உபசார விழாவின்போது அவரிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனேன். அப்போ ``பெண் என்பவள் நல்லவளாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவளாகவும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்'' என எழுதிக் கையொப்பமிட்டுத் தந்தார். இது என் வாழ்க்கைப் பயணத்தின் வழியெங்கும் நான் நினைவுகொள்ளும் வாக்கியம்.

அவரின் தலைமையில்தான் என் திருமணம் நடந்தது.

படிப்பு முடிந்ததும் 1972-ல் திருமணமாகி, நான் பி.பி.சி-யில் பணிபுரிய லண்டனுக்கு என் கணவருடன் சென்றுவிட்டேன். அங்கு 5 ஆண்டுகள் பணியாற்றினேன். அது என் வாழ்க்கையின் வசந்த காலமா இருந்தது. விதி தந்த வேதனையாய் என் கணவர் என் 39-வது வயதில் மறைந்தார்.

நூலறுந்த பட்டமானது என் வாழ்வு.

புயலில் சிக்கிய படகாக நான். நானும் என் இரண்டு பெண்பிள்ளைகளும் கையறு நிலையில் இருந்தோம். நானே படகு, நானே துடுப்பு, நானே மாலுமி என்ற நிலையில் கல்லூரிப் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடர்ந்தேன். சிறுவயதிலேயே கைம்பெண்ணானதால் என் தலைக்குமேலே பல பருந்துகளும் கழுகுகளும் வட்டமிட்டன.

அதன் பிறகு நான் ஆன்மிகச் சொற்பொழிவாளராக, பட்டிமன்றப்பேச்சாளராக தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வலம் வந்தேன்.

Valdis zatlers biography closing stages abraham

சைவத் திருமறைகளையும் தேவார திருவாசகத்தையும் ஆழ்ந்து வாசித்தேன். அவை என் மனக்கவலையை மாற்றும் மருந்தாகின.

நான் தன்னந்தனியாக என்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்தேன். பொதுவாழ்க்கையில், பேச்சாளராகவும் பேராசிரியராகவும் இருந்துகொண்டு இந்தச் சமூகத்தை எதிர்கொள்வது ஒரு பெண்ணாக அத்தனை எளிதான காரியமாக இல்லை.

`மீ டூ பிரச்னை' பற்றி சமீபத்தில் பேசுகிறார்கள்.

சினிமா துறையில் மட்டுமல்ல. எல்லாத் துறைகளிலுமே, எல்லா காலத்திலுமே இந்தப் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. ஆனால், அதையெல்லாம் தாண்டி ஒரு பெண் வெற்றிபெற மிகப்பெரிய வைராக்கியமும் மன உறுதியும் தேவைப்படுகிறது. அது எனக்கு இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்லுவேன்.

நான் சிறுவயதிலிருந்தே எங்களின் சித்தப்பா, பெரியப்பா குழந்தைகளுடன் வளர்ந்தவள்.

எங்கள் வீட்டில் 16 ஆண் பிள்ளைகள். நான் ஒருத்திதான் பெண்.

அதனால் எப்போதுமே என் அண்ணன், தம்பிங்க கூடவே நான் இருப்பேன். அவர்களுடன்தான் கில்லி விளையாடுவது, ஐஸ்பாய் விளையாடுவது என என் பால்ய காலம் கழிந்தது. அதனால் பிற்காலத்தில் பணியின் காரணமாக சக ஆண்களுடன் பழகுவதில் எனக்கு எந்தவித சிரமமும் இல்லாமலிருந்தது.

என்னைவிட வயதில் சிறியவராக இருந்தால், `தம்பி' என்றும் பெரியவராக இருந்தால், `அண்ணன்' என்றும் கூப்பிடுவேன்.

அதனால்தான் நான் தனியாக கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என எத்தனையோ நாடுகளுக்குப் போய் கவியரங்கம், பட்டிமன்றங்களில் பேசிவிட்டு வருகின்றேன். அதுபோன்ற தருணங்களில் மு.வரதராசனாரின் வாக்கியங்கள்தான் எனக்கு பெரிய காப்புக் கவசம்.

அவைதான் என் வாழ்க்கையை வழி நடத்திச் செல்லும் வெற்றி மந்திரங்கள்'' என்கிறார் பட்டிமன்றப் பேச்சாளரும் பேராசிரியருமான சாரதா நம்பி ஆரூரன்.

Back to top